விசுவாசி!

ஓவியம்
ஓவியம்ராஜா
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்,.எம்.வீரப்பன் பல்வேறு அனுபவங்களுக்குப் பின்னால் ஐம்பதுகளில் எம்ஜிஆரின் நாடக சபாவில் நிர்வாகியாகச் சேர்ந்து, அவரது திரைப்பட நிறுவன நிர்வாகியாகவும் பின்னர் சத்யா மூவீஸ் மூலமாக தயாரிப்பாளராகவும் இருந்தவர்.

எம்ஜிஆர் 1972-ல் திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக தொடங்கியபோது, கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களால்தான் அரசியல்ரீதியாக  எம்ஜிஆர் வழி நடத்தப்பட்டார். எம்ஜிஆர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணியை ஏற்றிருந்தவர் முசிறிப்பித்தன். ஆர்எம்.வீ இந்த கட்டங்களில் பின்னணியில் இருந்தே செயல்பட்டார். “அந்த காலகட்டங்களில் பல்வேறு தலைவர்கள் எம்ஜிஆருடன் இருந்தாரகள். திமுகவில் இருந்த மூத்த தலைவர்களான நெடுஞ்செழியன், நாஞ்சிலார், மதியழகன் போன்றவர்கள் வந்திருந்தனர். எனவே ஆர் எம் வீரப்பன் போன்ற எம்ஜிஆர் விசுவாசிகளின் பங்கு குறைவானதே. ஆனால் ஆர்.எம்.வீயைப் பற்றி அந்த காலத்திலிருந்தே ஒன்று சொல்வார்கள். எம்.ஜிஆர் விரும்புவதைச் செய்பவர் அல்ல ஆர் எம்.வீ. எம்ஜிஆருக்கு எது நல்லதோ அதை மட்டும் செய்பவர் என்று. இதுதான் எம்ஜிஆர் ஆர்.எம்வீ உறவின் முக்கிய அம்சமாக விளங்கியது” என்று சொல்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

1977ல் அதிமுக வெற்றிபெற்றது. அதற்கு அடுத்ததாக 1980ல் இந்திரா காங்கிரஸ் - திமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வென்றபின்னர் அதிமுக கலகலத்தது. அதற்கடுத்து பலர் கட்சியை விட்டும் விலகினர். எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது. சோதனையான காலகட்டத்தில் என்ன குற்றம் செய்தேன் என்று தமிழ்நாடு முழுக்க எம்ஜிஆர் பிரச்சாரம் செய்து அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலுக்குப் பின்னர்தான் எம்ஜிஆருக்குப் பின்னால் இருந்த ஆர்எம்வீரப்பன், வெளிப்படையான அரசியலில் இறங்கினார். எம்.எல்.சியாக இருந்த அவர் அறநிலையத்துறை அமைச்சர் ஆனார். அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது திருச்செந்தூர் சுப்ரமணியப்பிள்ளை கொலை நடந்தது. நீதிகேட்டு நெடும்பயணம் சென்றார் கலைஞர். திமுகவினரால் பல்லாண்டுகள் ஆர்.எம்.வீ. இந்த சம்பவத்தால் விமர்சிக்கப்பட்டு வந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது இலாகா மாற்றப்பட்டு செய்தித்துறைக்கு வந்தார்.

இந்த காலகட்டத்தில் அவர் செய்த அரசியல்ரீதியான முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று, 1981ல் மதுரையில் நடந்த உலகத்தமிழ்மாநாட்டில் அரசியல், சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜெயலலிதாவை அழைத்து ஒரு நாட்டிய நாடகம் நடத்த ஏற்பாடு செய்தது.

“ஆர் எம் வீ. எம்ஜிஆரிடம் பற்றுகொண்டவராக இருப்பினும் மாறுபட்ட கருத்துக்களை அவரிடம் நேரடியாக சொல்லிப் போராடக்கூடியவர்.  ஒரு நகரில் ஒரு பிரமுகருக்கு சிலைவைக்க ஏற்பாடு நடந்தது. அந்த நபர் சற்று சர்ச்சைக்குரியவர். இவருக்கெல்லாம் எதற்குச் சிலை என்று ஆர்.எம்.வீ கடுமையாக எதிர்த்தார். இதையடுத்து எம் ஜி ஆர் வைக்கலை..வைக்கலை.. போதுமா? என்று அவருக்குப் பதிலளித்துக்கொண்டே வந்து ஓர் ஆலோசனைக்கூட்டத்தில் அமர்ந்ததை நான் கண்டிருக்கிறேன். ஒரு முக்கிய தமிழ்ப்பத்திரிகைக்கு பொன்விழா. அதில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கலைஞரும் கலந்துகொண்டார். முதல்வர் எம்ஜிஆரின் பெயரும் நிகழ்ச்சி நிரலில் இருந்தது. ஆனால் அவர் ஏதோ குறைகண்டு வரவில்லை. ஆனால் செய்தித்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீ. நான் போகாமல் இருக்கமாட்டேன் என்று அவரிடமே சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்குப் போய் கலந்துகொண்டார்” என்று நினைவுகூர்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

எம்ஜிஆருக்கு 1984 தேர்தலின்போது உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அவர் இல்லாமலேயே அவர் கையெழுத்திட்ட வேட்புமனு ஆண்டிப்பட்டி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் நெடுஞ்செழியன் அமெரிக்கா சென்று அவரை சந்தித்துத் திரும்பியிருந்தார். நெடுஞ்செழியன் பொறுப்பு முதல்வராக இருப்பினும்  ஆர்.எம்.வீதான் நிஜமான அதிகார மையம். அந்த தேர்தலில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை ஆர்.எம்.வீ அனுமதிக்கவில்லை. ஆனால் அதை மீறி அவர் தமிழகம் முழுக்க செய்த பிரச்சாரம் அந்த தேர்தலில் அதிமுக வெற்றிக்கு உதவி செய்தது. எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து திரும்பியபோதும் இந்தப் பனிப்போர் தொடர்ந்தது. ஜெ. - ஆர்.எம்.வீ இருவரையும் பேலன்ஸ் பண்ணியே எம்ஜிஆர் அந்நேரம் அரசியல் நடத்தியதாகச் சொல்வார்கள்.

திறமையான அமைச்சர்கள், சிறந்த அதிகாரிகளை அடையாளம் கண்டு எம்ஜிஆரிடம் சொல்லி அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்ததால் அவரது நிர்வாகம் சிறப்பாகவே அமைந்தது. இதனால் அமைச்சவையில் ஆர் எம்வீயின் ஆதரவாளர்கள் பெருகினர். இவருக்கு இணையாக ஜெயலலிதாவும்  இன்னொரு பக்கம் வளர்ந்தார். எனவே எம்ஜிஆருக்குப் பிரியமான இருவருக்கும் இடையே மோதல்போக்கு உருவானது. அது தமிழக அரசியலில் சுவாரசியமான இன்னொரு பக்கம்.

“ஒரு கட்டத்தில் ஆர்.எம்.வீ ஆதரவாளர்களுக்கு செக்  வைக்க எம்ஜிஆர் கருதினார்.  வ.உ.சி மாவட்டம் தொடங்கி வைக்க தூத்துக்குடி சென்ற அவர் அங்கே வைத்து பத்து அமைச்சர்களை நீக்கும் அறிவிப்பை வெளியிட விரும்பினார். ஆனால் இவ்வளவு முக்கிய அறிவிப்பை தலைநகரில் வைத்து வெளியிடுவதே நல்லது என்று அவருக்குத் தோன்றியிருக்கவேண்டும். எனவே சென்னைக்குத் திரும்பி வந்து அதைச் செய்தார். ஆனால் ஆர்.எம்.வீ இந்த அறிவிப்புகளால் அசருகிறவர் இல்லை. எப்போதும்போல எம்ஜிஆரின் அணுக்கமானவராக தொடர்ந்தார்.” என்று நினைவுகூர்கிறார் இன்னொரு பத்திரிகையாளர்.

“ஆர்.எம்.வீ மாற்றுக்கருத்துக்கள் உடையவர்களை மதிப்பவர். அவர்களின் கருத்துக்களை காதுகொடுத்துக் கேட்டு தன் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ளத் தயங்கமாட்டார். இதையே எம்ஜிஆருக்கும்

சொல்லுவார். திரைப்படத்துறையில் இருந்து அரசியல் துறை வரை பல்வேறு கட்டத்தில் பலர் எம்ஜிஆருக்கு அணுக்கமானவர்களாக இருப்பினும் தொடர்ச்சியாக அவருடன் இருந்து அவரது வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களில் ஆர்.எம்.வீக்கு முக்கிய பங்கு உண்டு.

வீரப்பன் என்றும் மக்கள் செல்வாக்குப் பெற்றவர் அல்ல. அதைப் பெறவும் விரும்பியவர் அல்ல. மதுரைக்கு காளிமுத்து வந்தாரெனில் அவரைக் காண கட்சிக்காரர்கள் அலைமோதுவர். ஆனால் அதே சமயம் வீரப்பன் வந்தால் கூட்டம் இருக்காது. ஆனால் காளிமுத்து இவரிடம் பணிந்து நிற்பார். இதுபோலொரு பாணிதான் அவருடையது. அதனால் தான் ஜானகி அணியை வழி நடத்தியபோது அவரால் வெல்ல இயலாமல் போனது. எம்ஜிஆரிடம் இருந்துதான் ஆர்.எம்.வீ அதிகாரம் பெற்றார். அதை அவரது நலனுக்காகவே பயன்படுத்தியவர் என்றுதான் இவரைப் பற்றிச் சொல்லவேண்டும்” என்கிறார் தென்பகுதியைச் சேர்ந்த ஓர் அரசியல் விமர்சகர்.

டிசம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com